Tuesday, 22 September 2015

விவசாயி

பட்டினி என்பது அறியாது
உழைத்து உண்ட சாதி,
படுத்து கிடந்த கழனியை
இன்று பரிதவித்து தேடுது.

அன்று பஞ்சம் என்ற ஒன்று
பரிதவித்து நின்றது,
இன்று தஞ்சம் என்று வந்தது
தலைவிரித்து ஆடுது.

கழனியிலே நடந்து நடந்து 
அளந்தாச்சு - கால்களாலே,
இன்று அளந்து அளந்து
நட்டாச்சு – கானிகால்களாலே.

தாகம் என்று வந்தோருக்கு
மொண்டு கொடுத்த சாதி,
தண்ணீர் என்று தேடி - இன்று
கால் கடுக்க நடக்குது.

வரப்பேறி வழிந்தோடும் நீரை 
வாய்க்காலுக்கு திருப்பி விட்ட சாதி,
விழி நீரை வழித்து போட்டு
பயிர் வளர காத்துக்கிடக்குது.

கல்லணை கட்டி, நீரை தேக்கி வைத்த சாதி
விழிமேல் கை வைத்து எதிர்பாத்து காத்திருக்குது
கேட்டவருக்கு எடுத்து கொடுத்த சாதி
இன்று கேட்டுகிட்டு கையையேந்தி நிக்குது.

காத்திருந்து காத்திருந்து காணாமல் போன சாதி,
உழுது உழுது ஓடாய் போன சாதி,
முயன்று முயன்று முடியாது போன சாதி,
விழி பிதுங்கி, அழிந்து கொண்டிருக்குது அந்த சாதி,

காலமெல்லாம் கழனியில் உழைத்துவந்த சாதி,
கால் வலிக்க இன்றும் காத்து கிடக்கும் சாதி,
வாய்ப்பு என்று வந்தால் வென்று காட்டும் சாதி,
விவசாயி என்று பெயர் பெற்ற சாதி.
                                          
      

No comments:

Post a Comment