Monday, 14 March 2016

போதும், போதும் இந்த மக்கள் ஆட்சி


மன்னன் என்பவனும் மகேசன் தான்.
மக்கள் என்பவரும் மன்னர்கள் தான்.
மன்னர் ஆட்சியில்.

அரசு என்பது ஆண்டவன் தான்,
மக்கள் என்பவர்கள் அடிமைகள் தான்.
மக்கள் ஆட்சியில்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அரசாட்சி,
அறுபது ஆண்டுகள் அரசியலாட்சி,
இதில் எங்கே நடந்தது மக்கள் ஆட்சி!!!

அடிமையாய் இருந்தோம் ஆங்கிலேயனிடம்
இன்றும் இருக்கிறோம் அரசியல் தெரிந்தவர்களிடம்.
போதும் போதும் இந்த மக்கள் ஆட்சி.

எண்ணி எண்ணி தொழுதாலும்
இங்கே நல்லவர் என்றும், தீயவர் என்றும் பேதம் இல்லை.

கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய்,
வாயிருந்தும் ஊமையாய் இருந்தோம், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும்.

நீண்ட வரிசையில் காத்திருந்தோம்,
ஒற்றை விரலால், நம்மை நாமே அடிமை ஆக்கினோம்.

படித்தவர்கள் பலகோடி இருந்தும்
படித்தவன் எவனும் பதவியில் இல்லை.

IAS, IPS ஆனால் மட்டும் என்ன - இவர்கள் 
அரசியல்வாதிகள் தூக்கி எறியும் காகிதங்கள் தானே.

படித்தும் கூட பயனில்லை,
சட்டம் கூட துணையில்லை.

நேர்மையான தேர்தல் உண்டு,
நேர்மையான அரசியல்வாதி உண்டா?

இனியேனும்,
சிந்தனை என்பதை வளர செய்வோம்
மக்கள் ஆட்சி என்பதை மலர செய்வோம்.

வானம்

அழகிற்கு ஆயிரம் உவமைகள் கூறலாம் ,
அனைத்திற்கும் ஒரே உவமையாய் உன்னை கூறலாம்.

நீ கருத்தாலும் உன்னை ரசிப்பவர் இங்குண்டு,
நீ வெளுத்தாலும் உன்னை ரசிப்பவர் இங்குண்டு.

உன்னை தூற்றுபவர் தூற்றும் நேரம்
உன்னை போற்றுபவரும் இங்குண்டு.

எங்களை மகிழ்விப்பவளும் நீதான்,
எங்களை மயங்கிட செய்பவளும் நீதான்.

நீ அழுதாலும்,
எங்கள் வாழ்வை செழித்திட செய்பவளும் நீதான்.

நீ சிரித்தாலும்,
எங்கள் வயிறை வாடிட செய்பவளும் நீதான்.

எங்களின் ஏற்றமும், தாழ்வும் நீதான்.
எங்களின் இரவும், பகலும் நீதான்.

சிவந்த திலகம் அணிந்த 
தீர்க்க சுமங்கலி நீதான்.

வண்ணங்கள் ஆயிரம் கொண்டவளும் நீதான்,
ஒலி (இடி), ஒளியை (மின்னல்) தாங்கியவளும் நீதான்.

அதிசயத்தின் பிறப்பிடம் நீதான்,
பூமித்தாயின் காதலனும் நீதான்.

வளர்ந்த பயிருக்கும்,
வாடிய பயிருக்கும் தந்தையும் நீதான்.

கோள்களின் உறைவிடமும் நீதான்,
கோளத்தின் கூரையும் நீதான்.

பஞ்சபூதங்களில் உயர்ந்தவனும் நீதான்,
குடையாய் நின்று எங்களை காப்பவனும் நீதான்!!

நட்பு

விதையின்றி முளைத்த செடி,

பந்தலின்றி படர்ந்த கொடி,

கிளையின்றி துளிர்த்த இலை,

மலரின்றி வீசும் மனம்.



உறவின்றி கிடைத்த உன்னதம்,

அளவின்றி கிடைக்கும் ஆனந்தம்,

குறைவின்றி வைக்கும் நம்பிக்கை,

சுதந்திரமாய் வாய்த்த அடிமை.



முயற்சியின்றி கிடைத்த வெற்றி,

தொய்வின்றி கிடைக்கும் உறுதுணை,

வேண்டுகோளின்றி உதவும் கரம்.

தட்சணையின்றி காக்கும் கடவுள்.



நீயின்றி, நானின்றி நாமென்று சொல்வது!!!

இரவு, பகல் பாராது உடன் வந்து சேர்வது!!!

மூன்றெழுத்து மந்திரத்தில் மிக முக்கியமாய் போற்றுவது!!!


அது , அம்மா - அப்பாவிற்கு அடுத்தபடியானது!!!

விலகிநின்று பார்

எப்போதும் மற்றோரை காண்பவரே
உன்னை நீ கண்டாயோ?
சற்று விலகிநின்று பார்.

பிறர் பாதை அடைப்பதனால்
உன் பாதை திறந்திடுமா?
சற்று பொறுத்திருந்து பார்.

உள்ளங்கையில் நீர் இருந்தால்,
உள்ளமது குளிர்ந்திடுமா?
சற்று அருந்தி பார்.

மனதிற்குள் ஒலி எழுந்தால்
உலகிற்கது கேட்டிடுமா?
சற்று உரக்க சொல்லிப்பார்.

முயன்றது முடியாவிடில்
முயற்சி நின்றிடுமா?
சற்று முயன்று பார்.

கல்லால் செய்ததனால்
கடவுள் மனம் கல்லாகிடுமா?
சற்று உணர்ந்து பார்.

உளமார வாழ்வதனால்
வாழ்வானது வளம்பெருமா?
சற்று காலம் வாழ்ந்துபார்.

வாழ்க்கை என்பது களிப்பாகும்,
வெற்றி என்பது உனதாகும்.
சற்று இவைகளை முயன்றுபார்.