Saturday, 31 October 2015

விவசாயி



மண்ணில் தவமிருந்து
மண்ணோடு வாழ்பவன்.
தான் வளர்த்த பயிரினை
தாரை வார்த்துக் கொடுத்தவன்.

கால் வயிறு நிரம்ப
கால் கடுக்க உழைப்பவன்,
தன் வீட்டில் உலை கொதிக்க
தரணிக்கு உணவளித்தவன்.

விளைவித்தவன்
விலை வைக்க முடியாது தவிக்கிறான்.
இடையில் வந்தவன்,
இன்னும் கொஞ்சம் இறுக்குகிறான்.

வங்கியில் கடன் வாங்கி
வட்டி கட்டி அழுகிறான்.
அரசாங்கத்தை நம்பி
அரைக்கோவனத்தோடு நிற்கிறான்.

வந்தவனுக்கெல்லாம்
வரிச்சலுகை கொடுத்தவன்,
உழுது வாழும் உழவனுக்கென
உள்ள மானியத்தையும் மறுக்கிறான்.

கடைசிச்சொட்டு நீருக்காக,
கடைமடையை எட்டிப்பார்த்து காத்திருந்தவன்,
ஏமாற்றத்தின் உச்சத்தில்
ஏக்கமுற்று உடைந்து போனான்.

கடைசிவரை காத்திருந்து
கடவுளும் கைவிடவே,
உயிரென எண்ணியிருந்த மண்ணில்
உடலையும் சேர்த்துக்கொள்ள சென்றுவிட்டான்.

என்னவென்று கூறுவது இவனை
எங்கள் நாட்டு விவசாயி என்றா? - அல்லது
உணவளித்து வாழ்வளித்த
உயிருள்ள கடவுள் என்றா...

படைப்பவன் கடவுள் என்றால்
இவனும் கடவுள் தான்.
கொடுப்பவன் இறைவன் என்றால்
இவனும் இறைவன் தான்.



படைப்பு    
 தமிழ் ரசிகன்


No comments:

Post a Comment